Thursday, April 3, 2008

திருப்பாவையில் ஒரு புதிய பக்திநெறிப் புலப்பாடு.


திருப்பாவையில் ஒரு புதிய
பக்திநெறிப் புலப்பாடு.



<><><><><><><><><><><><><><><><><>
முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்
முன்னாள் ஆய்வுப் பேராசிரியர்
கக்சுயின் பல்கலைக் கழகம்
ரோக்கியோ, ஜப்பான்.














1. முன்னுரை

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்
வாரின் வளர்ப்புமகள் ஆண்டாள். முத்தமிழ்
வளர்த்த முச்சங்கம் இருந்த பாண்டி நாட்டிலே
உள்ள ஸ்ரீ வில்லிபுத்தூரே ஆண்டாளின்
பிறப்பிடமாகும். ஆடி மாதத்துப் பூரநட்சத்திரத்
தன்று துளசிப்பாத்தியில் பெரியாழ்வார்
இவளைக் குழந்தையாகக் கண்டெடுத்து
வளர்த்தவர்;


திருநந்தவனம் அமைத்து மலர்மாலை தொடுத்துக்
கண்ணனுக்குச் சார்த்தி வழிபாடு செய்யும் வழக்க
முடையவர். ஆண்டாளுக்கு ‘கோதை’ எனப்பெயரிட்டு
வளர்த்தார். பெரியாழ்வார் கோதைக்கு கண்ணன்
கதைகளையும் உயர்ந்த தத்துவ ஞானக் கொள்கை
களையும் பயிற்றினார். அதனால் கோதையின் உள்ளம்
பக்திச் சூழலால் பண்பட்டு விளங்கியது. கண்ணனையே
அடைய வேண்டும் என அவாவுற்றது.

அவளுடைய பக்தியுணர்வு ஏனைய
ஆழ்வார்களிலிருந்து வேறுபட்டமைந்திருந்தது.
பெண்மைக்கென புதிய பக்திநெறியை உண்டாக்கி
உலகிற்கு அளித்தது. ஆண்டாளின் செம்மொழிப்
புலமை அதற்குச் சிறந்த ஊடகமாக விளங்கியது.
அப்பக்திநெறியை நன்கு விளக்கி உலக வழிபாட்டு
நெறியைச் செம்மைப்படுத்த அது எவ்வகையில்
உதவும் என்பதை எடுத்துக் காட்டுவதே இக்
கட்டுரையின் இலக்காகும். ஆய்வுக்குத் தரவாக
ஆண்டாள் பாடிய திருப்பாவை என்னும் பதிகம்
மட்டுமே பயன்படுத்தப்படும்.


2. பெண்மையின் வளர்ச்சியும் பக்திநெறியும்.

குழந்தைப் பருவத்தில் கண்ணனைப் பற்றித்
தன்னளவில் எண்ணிப்பார்க்க முடியாத கோதை
குமரிப்பருவம் அடைந்ததும் உலகியல் நெறியான
மணவினையை நாடாது கண்ணனையே விரும்பினாள்.
திருமால் மீது அவள் கொண்ட அன்பு வித்தியாசமானது.
தந்தையார் கண்ணனுக்குச் சார்த்த எனக் கட்டி வைத்த
மலர்மாலையைத் தானே சூடிப்பார்த்தாள்.

சூடி நிற்கும் நிலையில் மாலையின் அமைப்பு
முழுமையானதுதானா என அறிய விரும்பினாள். இது
அவளுடைய பக்திநிலையில் ஒரு தனித்துவமான
இயல்பு ஆகும். இச்செயற்பாடே அவளுக்குச்
‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ என்ற
சிறப்புப் பெயரைத் தந்தது.

தன்னுடைய வாழ்வியல் நிலையில் கண்ணனை
அடைவது எளிதன்று என்பதை உணர்ந்த கோதை
ஆயர்பாடிச் சிறுமியாகத் தன்னை மாற்றிக்
கொண்டாள். தன்னுடைய பெண்மைநிலையில்
உயர்ந்த வேதத்தால் உபநிடதங்களால் பிற
அறநூல்களால் கண்ணனை அடைய முடியாது
என்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது.
எனவே ஒரு புதிய பக்திநெறியை உருவாக்க எண்ணிச்
செயற்பட்டாள்.; அந்தணர் குலத்து உதித்த பெரியாழ்வாரின்
மகளாக இருந்து கொண்டு கண்ணனை அடையத்
தானே ஒரு வழியைச் சமைத்துக் கொண்டாள்.

ஆயர் பாடிச் சிறுமியாக மாறிவிட தன் நடை, உடை,
பாவனை, பேச்சு அனைத்தையும் மாற்றிக் கொண்டாள்.
ஆயர்பாடி இடைச்சிகளைப் போல தலைமுடியை
ஒரு பக்கமாகச் சாய்த்து கொண்டை அமைத்துக்
கொண்டாள். அவர்கள் வெள்ளை உள்ளத்துடன்
பேசும் மொழியினைத் தானும் ஏறிட்டுக்கொண்டு
பேசலானாள். இடைச்சிகளுக்கேயுரிய முடை
நாற்றமாகிய வெண்ணெய் நாற்றம் ஏற்பட பால்,
தயிர், வெண்ணெய் இவற்றை உடம்பிலே பூசிக்
கொண்டாள்.

இச்செய்திகளை உரையாசிரியச் சக்கரவர்த்தியான
பெரியவாச்சான் பிள்ளை
“இடைமுடியும் இடைப்பேச்சும் முடை
நாற்றமுமாயிற்று” என்பார்.
முற்றிலும் தன்னை இடையர் குலப்பெண்ணாகவே
பாவனையால் மாற்றிக்கொண்ட ஆண்டாள் நோன்பை
ஒரு வெளிக்காரணமாகக் கொண்டு திருப்பாவைப்
பாடல்கள் முப்பதையும் பாடிப் பரவிப் பரமனைக்
கிட்டிக்கைங்கர்யமாகிற தொண்டு செய்யும்
நற்பேற்றினைப் பெற்று மகிழ்ந்ததாகப் பேசுகிறாள்.

இந்நிலையில் திருப்பாவை பாடிய ஆண்டாளின்
பாடல்களில் பெண்மையின் வளர்ச்சி நிலைகள்
சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழிலக்கியத்தில்
‘பாவை’ என்னும் செய்யுள் வடிவத்தில்
பலர் பாடியுள்ளனர். ஆண்டாள் கண்ணன் மீது
காதல் கொண்டு அவனுக்கே பிறவி தோறும்
தொண்டாற்ற விரும்பிப் பாடிய திருப்பாவை
போல் மாணிக்கவாகசர் ‘திருவெம்பாவை’
என்னும் பாடல்களைச் சிவபெருமான் மீது
பாடியுள்ளார்.

சைன சமயத்தில் ‘அருகன் திருவெம்பாவை’
என்னும் நூல் மகாவீரரைக் குறித்து இயற்றப்பட்டுள்ளது.
இப்பாடல்களை விட ஆண்டாள் பாடல் தனித்துவமானது.
செம்மொழித்தமிழ் ஆண்டாள் பாடல்களில்
அவளுடைய பக்தியுணர்வைத் தெளிவாகப்
புலப்படுத்துகின்றது.

பெண்மையின் வளர்ச்சி நிலைகளைப் தெளிவாகப்
பல சொற்கள் மூலமும் சொற்றொடர்கள் மூலமும்
ஆண்டாள் குறிப்பிட்டுச் செல்வது இங்கு அகச்சான்றாக
அமைகிறது.


பாடல்: 01 ஆய்ப்பாடிச் செல்வச்சிறுமீர் - பருவமடையாத சிறுபெண்கள்.
பாடல்: 01 நேரிழையீர் - அழகோடு இயைந்த வினைத்திறனுடைய
அணிகலன்களை அணிந்த இளம் பெண்கள்.
பாடல்: 07 பேய்ப்பெண்னே – அறிவில்லாத பெண்ணே.
பாடல்: 09 மாமான் மகனே – முறைப்பெண்.
பாடல்: 10 அருங்கலமே – ஆபரணம் போன்ற பெண்.
பாடல்: 11 பொற்கொடியே – அழகிய வடிவுடைய பெண்.
பாடல்: 11 புனமயிலே – மயில்போன்ற தோற்றமுடையபெண்.
பாடல்: 11 செல்வப் பெண்டாட்டி – விரும்பப்படும் மனைவி.
பாடல்: 12 தங்காய் - சகோதரி உறவுடைய பெண்.
பாடல்: 13 பிள்ளைகள் - பெண்பிள்ளைகள்.
பாடல்: 14 நங்காய் - நிறைவான பெண்.
பாடல்: 15 இளங்கிளியே - இளமையான கிளிபோன்ற சொற்;களையுடையவள்
பாடல்: 15 நங்கைமீர் - நிறைவான பெண்களே
பாடல்: 16 ஆயர் சிறுமியர் - இடையர் பெண்கள்.
பாடல்: 17 கொழுந்தே – முதன்மையாகப் பிறந்தபெண்.
பாடல்: 17 குலவிளக்கே – மங்களதீபம் போன்றவளே.
பாடல்: 17 எம்பெருமாட்டியசோதா – எமது பெருமைக்குரிய யசோதா
பாடல்: 18 நப்பின்னாய் - நப்பின்னைப் பிராட்டி.
பாடல்: 18 மருமகளே – மருமகள் முறையான பெண்.
பாடல்: 18 கந்தங்கமழுங்குழலீ – பரிமளம் வீசும் கூந்தலுடைய இளம்பெண்
பாடல்: 19 ப+ங்குழல் நப்பின்னை – மலரணிந்த கூந்தலுடைய நப்பினை
பாடல்: 20 நப்பின்னை நங்காய் - நிறைவான பெண்ணான நப்பின்னை
பாடல்: 28 அறியாத பிள்ளைகள் - உலகவழக்கம் அறியாத இளம்பெண்கள்.
பாடல்: 30 சேயிழையார் - செவ்விதான ஆபரணமணிந்த கோபிகாஸ்திரிகள்.


மேற்காட்டிய சான்றுகள் ஆண்டாள் பக்திநெறியில்
பல்வேறு நிலையிலுள்ள பெண்களையும் பற்றி
எண்ணிச் செயற்பட்டதை உணர்த்துகின்றன. வழிபாடு
என்பது கூட்டுநிலையில் செய்யப்படவேண்டும் என
ஆண்டாள் கருதினாள். எல்லா நிலையில் உள்ள பெண்
களும் ஒன்றிணைந்து கண்ணனை வழிபடும் புதிய
முறைமையைத் தனது திருப்பாவையிலே
பாடியுள்ளாள்.


3. வழிபாட்டு நெறியில் பக்திப்


புலப்பாடு.


உலக வாழ்வில் பெண்களின் வழிபாட்டுநெறியை
ஆண்டாள் வகுத்துக் காட்டியிருப்பது தனித்துவமானது.
பாவையராகிய பெண்கள் பாவையை வைத்துக்
கொண்டாடிய பாவை நோன்பை ஆண்டாள் சிறப்பான
நோன்பாக உலகிற்கு அறிவித்துள்ளாள். அவள் பாடிய
திருப்பாவையில் நல்ல மழை பெய்து நாடு செழிக்கப்
பெண்கள் கண்ணனை வழிபடவேண்டும் என்ற
ஆற்றுப்படுத்தல் காணப்படுகின்றது. கண்ணனையே
கணவனாக அடையவேண்டும் என்ற ஆண்டாளின்
விருப்பும் கூறப்பட்டுள்ளது.

மாதங்களிலே சிறந்த மாதமாக மார்கழியை
ஆண்டாள் குறிப்பிடுகிறாள். ‘மாதங்கள்
அனைத்திலும் நான் மார்கழி மாதம்’ என்று
பகவத்கீதையில் கண்ணன் கூறியதை நினைவில்
கொண்டு மார்கழி மாதத்திலே நோன்பிருப்பது
சிறந்ததென எண்ணிச் செயற்படுகிறாள்.

ஒரு நாளின் பல கூறுகளில் அதிகாலை வேளை
சிறப்பானது. புதிய செயற்பாடுகளை அமைதியாகச்
சிந்திப்பதற்கு வாய்ப்பானது. இந்த வேளையை
‘மார்கழிநோன்பு’ தொடங்குவதற்கு ஏற்றதாக
ஆண்டாள் தெரிவு செய்துள்ளாள். இத்தூய விரதம்
பற்றிய செய்திகளைப் பாடலிலே விளக்கியுள்ளாள்.

நோன்பு பற்றிய விளக்கம், அக்காலத்தில் விட
வேண்டிய செயற்பாடுகள், பரம்பொருளின்
அருள்நிலை, பக்தர்களின் நிலை என
அனைத்தையும் பாடல்களில் எடுத்துக்
கூறியுள்ளாள்.

கண்ணனை வழிபட்டு உறவுபூண்டு ஒவ்வொரு
வரும் தமக்கு இசைவான தொண்டுகளைச்
செய்ய வேண்டும். இறைவனிடம் கைங்கரியப்
பிரார்த்தனை செய்து கொள்வதுதான் திருப்
பாவையின் உட்பொருளாக உள்ளது.

வைணவத்தை உருவாக்கிய மகாசக்திகளில்
ஒன்றாக திருப்பாவை திகழ்கிறது எனின்
மிகையாகாது.

திருப்பாவைப்பாடல்களின் அமைப்பு
அக்காலப் பக்திநெறியில் ஒரு புதிய
வழிபாட்டு மரபை வரையறை செய்வதாக
உள்ளது. 30 பாடல்களில் ஓர் ஒழுங்கான நெறி
முன்வைக்கப்பட்டுளளது. முதலாவது பாட்டு
நோன்புக்குரிய காலத்தைக் குறிப்பிடுகிறது.

மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாள்’ என

நோன்பின் தொடக்கநாளைத் தெளிவாக
ஆண்டாள் குறிப்பிட்டுள்ளாள். இந்நோன்பு
தனியொருவரின் செயற்பாடன்று. பல பெண்கள்
சேர்ந்து நோற்பதாகும்.

‘சீர்மல்கும் ஆயர்பாடிச்சிறுமிகள்’ என்ற தொடர்

இதனை விளக்கி நிற்கின்றது. நோன்பின் பெறு
பேற்றையும் முதற்பாடலில் ஆண்டாள்
கூறியுள்ளாள். ‘நாராயணனே நமக்கே
பறைதருவான்’ என்ற தொடர் பாவை நோன்புக்குரிய
பறையைக்கண்ணனே தருவான் என்ற நம்பிக்கை
அவர்களுக்கு இருந்ததைப் புலப்படுத்துகின்றது.
இரண்டாவது பாடலில் நோன்பின் விதிமுறைகள்
குறிப்பிடப்பட்டுள்ளன. அதனை உலகத்தவர்க்கு
அறிவிக்கும் எண்ணம் ஆண்டாளுக்கு இருந்த
தெனலாம். “வையத்து வாழ்வீர்காள்” என்ற
விளித்தொடர் இதற்குச் சான்றாக உள்ளது.
அதில் நோன்பின் நியமங்கள் கூறப்பட்டுள்ளன.

“செய்யுங் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம்
பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டெழுதோம்
மலரிட்டு நாமுடியோம் செய்யாதன செய்யோம்
தீக்குறளைச் சென்றோதோம்.

”இங்கு விதிகளையும் விலக்குகளையும் எடுத்துக்
காட்டுவதன் மூலம் நோன்பின் தன்மை
உணர்த்தப்பட்டுள்ளது.

மூன்றாவது பாடல் நீராடிக் கண்ணனை
வழிபடுவதால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்
மும்மாரி பெய்யும்;, நீங்காத செல்வம் நிறையும்
எனக் கூறப்பட்டுள்ளது. நான்காவது பாடலில்
மழையை வேண்டுகிறார்கள.; நோன்பைத்
தொடர்வதற்கு நீ மழையைப் பொழியவேண்டும்
என்பது எல்லோரும் நன்மை பெறவேண்டும்
எனும் பொதுநலப்பாங்கைக் காட்டி நிற்கிறது.

ஐந்தாவது பாடல் நோன்புக்கு இடையூறு
வராமலிருக்க நீராடி வந்து தூய மலர்களைத்
தூவித் தொழுது வாயினாற் பாடிப் பரவ
வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.
ஆறாவது பாடல் தொடக்கம் பதினைந்தாவது
பாடல் வரையுள்ளவை துயிலெழுப்பும்
பாடல்களாக அமைந்துள்ளன. ஆண்டாளின்
தமிழ் மொழிப்புலமையாற்றலை இப்பாடல்கள்
காட்டி நிற்கின்றன.

இப்பத்துப்பாடல்களிலும் உரையாடல் நிலை
கூறப்பட்டுள்ளமை இன்னொரு புதிய செயற்பாடாக
உள்ளது. எல்லோரும் இணைந்து வழிபாடு செய்ய
வேண்டும் என்ற ஆண்டாளின் வழிபாட்டு
நெறிக்குப் பெண்களை ஆற்றுப்படுத்தும்
முறைமையை இப்பாடல்கள் தெளிவாய்
உணர்த்துகின்றன.


பாவாய், நங்காய், தங்காய், அருங்கலமே,
பொற்கொடியே, மாமன்மகளே போன்ற
விளிகள் பெண்களின் பல்வேறு நிலைகளில்
இருப்பவரையும் ஒன்றிணைப்பதைக் காட்டுகின்றன.
உலகத்துப் பெணகள்; அனைவரும் இந்நோன்பை
நோற்றுக் கண்ணன் அருளைப் பெறவேண்டும்
என்பது ஆண்டாளின் பக்தி நெறிப் புலப்பாடாகவுள்ளது.
‘எல்லேயிளங்கிளியே’ என்ற பாடல் வாக்குவாதப்
பாசுரமாக அமைந்துள்ளது. பெண்களின் உணர்வு
நிலைகளை அறிய வைக்கும் பாடலாகவுள்ளது.

பெண்கள் இணைந்து வழிபாடு செய்யும் நிலையைப்
16ஆம் பாடல் காட்டுகிறது. ஆயச்சிறுமிகள்
எல்லோருஞ் சென்று மணிவண்ணன்
இருக்குமிடம் சென்று அவனைக் காண்பதற்கு
வாயிற் கதவைத்திறக்க வேண்டுகிறார்கள்.


காவலரும் பெண்களின் தூய்மை கண்டு
கதவைத்திறந்து விடுகின்றனர். வழிபாட்டில்
தூய்மை பேணப்பட வேண்டுமென்பதை ஆண்டாள்
இப்பாடலில் நயமாகக் கூறியுள்ளாள். பதினேழாவத
பாடலில் தாயும் தந்தையும் அண்ணனும் தம்பியும்
ஆகிய நால்வர் துயில் எழுப்பப்படுகின்றனர்.

‘எம்பெருமான் நந்தகோபா எழுந்திராய்’

‘குலவிளக்கே எம்பிராட்டி யசோதா’,

‘உம்பர்கோமானே’

‘செல்வா பலதேவா’ என்னும்

தொடர்கள் இதனை விளக்குகின்றன.




4. உணர்வு நிலையால் ஒரு நெறிப்பட்ட


பக்தி வாழ்வியலை உணர்த்தல்.


பெண்மையின் இயல்பான குணநலன்களைச் சுட்டிக்காட்டி வைணவ வாழ்வியல் நிலைநின்று பக்தி வாழ்வியலை அமைத்துக் கொள்ளும் பாங்கு ஆண்டாளின் தனித்துவமாகும். திருப்பாவையில் பெண்ணின் உணர்வுநிலையைச் சிதறவிடாமல் ஆண்டாள் ஒருமுகப்படுத்துகின்றாள். பதினெட்டாவது பாடல் நந்தகோபன் மருமகளான நப்பின்னை மைத்துனன் பேர் பாடுவதற்காக அவளையே கதவைத்திறக்கும்படி வேண்டுவதாக அமைந்துள்ளது. பத்தொன்பதாவது பாடல் கண்ணன் கிடந்துறங்கும் இடம்பற்றிக் குறிப்பிடுகிறது. உலகியல் நிலைநின்று அக்காட்சியைப் பாவனை செய்து ஆண்டாள் பாடுகிறாள். உணர்வு நிலையைச் சிதறவிடாமல் பக்திநிலையை அவள் வெளிப்படுத்தும் பாங்கு தனித்துவமானது. “குத்துவிளக்கெரியக் கோட்டுக்காற் கட்டின் மேல் மெத்தென்ற பஞ்சசயநத்தின் மேலேறிக் கொத்தலர் ப+ங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்தமலர் மார்பா வாய்திறவாய் மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை எத்தனை போதுந் துயிலெழ வொட்டாய் காண் எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவமன்று தகவலோ ரெம்பாவாய்.”கண்ணனையும் நப்பின்னையையும் ஆண்டாள் காணும் நிலையில் பக்தியின் உணர்வு நிலை சிதறாமல் இருப்பதற்கு உணர்வைக் கட்டுப்படுத்தும் உள்ளம் தேவை அது பெண்களிடம் இருப்பதையும் ஆண்டாள் உணர்த்துகிறாள். நப்பின்னையை முதலில் எழுப்பிக் கண்ணனையும் எழுப்ப வேண்டும் மனப்பக்குவம் ஆண்டாளின் பாவனாபக்தியின் ஒழுங்கையே காட்டுகின்றது. அதனைத் தொடரும் பாடல்கள் நன்கு உணர்த்துகின்றன. கண்ணன் வீரத்தையும் அவன் சிங்கம் போல எழுந்துவரும் தோற்றத்தையும் நடையழகையும் வடிவழகையும் பாடுகின்றார்கள். கண்ணனது அருட்செயல்களை நினைந்து பக்திவசப்பட்டுப் பாடுவது பாடல்களில் துலக்கமாக அமைந்துள்ளது. கண்ணன் பிறப்பையும் நினைந்து பாடுகிறார்கள். நோன்பிருப்பதை மறவாமல் கண்ணனை நினைந்து பாடும் பெண்கள் அதனை முடிக்கும் தன்மையையும் கூறுகிறார்கள்.

“....... பல்கலனும் யாமணிவோம் ஆடையுடுப்போ மதன் பின்னே பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கைவழி வாரக் கூடியிருந்து குளிhந்;தேலோ ரெம்பாவாய்.”

வாழ்வியலாக அமைகிறது. வழிபாடு செய்யும் நடைமுறைகளைப் பின்பற்றிக் கண்ணனையே நினைந்து வாழும் ஒரு வாழ்வியலே எமக்கு ஏற்றது என்பதை ஆண்டாள் திட்டவட்டமாக எடுத்துக் கூறுகிறாள். கண்ணன் எங்களோடு இருக்கும் இயல்புடையவன.; ஒன்றிணைந்த உணர்வால் அவனைக் கண்டு வழிபட முடியும். இதுவே ஆண்டாள் உலகிற்கு எடுத்தியம்பும் செய்தியாகும்.

5. ஆண்டாளின் பக்திப்பாட்டிற்குத்


துணைநிற்கும் புலமை.

ஆண்டாள் பாடிய திருப்பாவைப் பாடலைப் படிப்பவர் எந்த நாட்டில் எந்தக்குலத்தில் பிறந்தவராயினும் திருமாலருள் பெற்று வாழ்வர். முப்பதாவது பாடல் இதனையே இயம்புகிறது. “வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கட்டிருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப்பறை கொண்டவற்றை யணிபுதுவைப் பைங்கமலத் தண்டெரியற் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலை முப்பதுந் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பா ரீரண்டு மால்வரைத்தோள் செங்கட்டிரு முகத்துச் செல்வத் திருமாலால் எங்குந் திருவருள் பெற்றின்புறுவ ரெம்பாவாய்”தன்னுடைய பாடல்களைச் ‘சங்கத்தமிழ்’ என்று ஆண்டாள் குறிப்பிட்டு உள்ளாள். தனது பக்தியுணர்வை வெளிப்படுத்த ஆண்டாள் பயன்படுத்திய மொழி அவள் செம்மொழிப் புலமையை நன்கு விளக்கியுள்ளது. உலக மக்களின் உணர்விலே பக்தியுணர்வைக் கலப்பதற்குத் தமிழ்மொழியே ஏற்றதென ஆண்டாள் எண்ணிப் பாடல்களைப் பாடியுள்ளாள். வழிபாட்டு நடைமுறைகளில் கண்ணனைப் பற்றிய அருட் செய்திகளை அறிவிப்பதும் இன்றியமையாதது என்பதே ஆண்டாளின் முடிவு. தனது பக்தியுணர்வைப் பலரறியச் செய்வதற்குத் தமிழ்மொழியையே ஊடகமாக்கியுள்ளாள். ஆண்டாள் கி.பி. 731இல் திருப்பாவையை இயற்றியதாக ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
அன்று தொட்டு இன்றுவரை திருப்பாவை மக்களால் ஓதப்பட்டு வருகின்றது. பண்டைத்தமிழர்களின் பாவை நோன்புக் காட்சிகளைத் தெளிவாக அறிய முடியவில்லை. ஆனால் ஆண்டாளின் திருப்பாவை பாவனை நிலையில் பாவை நோன்பை முழுமையாகக் காட்சிப்படுத்திக் காட்டுகின்றது. வடசொற்களைக் குறைத்து செந்தமிழில் தான் பாடிய பாவைப்பாடல்களைச் ‘சங்கத்தமிழ் மாலை’ எனப் பெயர் சூட்டி ஆண்டாள் வரையறை செய்தது பின்வந்த அடியார்களும் பக்தியுணர்வைத் தமிழ்மாலையாகப் பாட வழிகாட்டியது.
ஆண்டாளின் பக்திப் பாவனையை வெளிப்படுத்திக் காட்டுவதற்கு அவள் பயன்படுத்திய மொழி பெரிதும் உதவியுள்ளது. திருப்பாவையின் 29ஆம் பாடல் இதற்குச் சான்றாக அமையும்.
“சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய் பெற்றம் மேய்த் துண்ணும் குலத்திற் பிறந்து நீ குற்றேவலெங்களைக் கொள்ளாமற் போகா திற்றைப்பறை கொள்வானன்று காண் கோவிந்தா எற்றைக்கு மேழேழு பிறவிக்கு முன்தன்னோ டுற்றோமேயாவோ முனக்கே நாமாட் செய்வோம் மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.”இப்பாடலில் வரும் ‘சிற்றஞ் சிறுகாலை’ என்ற தொடர் ஆண்டாளின் புலமைத்திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இதனை ஐhதிப்பேச்சு என்று உரையாசிரியர் குறிப்பிடுவர். சிறு பெண்கள் எழுந்திருக்கவொண்ணாத குளிர்ப்போதை ஆண்டாள் செம்மொழியில் சிறு தொடராகக் காட்டியிருப்பது அவள் தமிழறிவின் ஆற்றலைக் காட்டுகிறது. கண்ணன் இடைக்குலத்தில் வளர்ந்தமையைக் குறிப்பிடும் போது ‘பெற்றம் மேய்த்துண்ணும் குலம்’ என்று குறிப்பிடுகிறாள். சங்க இலக்கியங்களில் ஆநிரை மேய்க்கும் முல்லை நிலமக்களின் வழித்தோன்றல்களாய ஆயரைப் பெற்றம் மேய்ப்போர் எனச் சிறப்பித்துக் கூறுகிறாள். இடையர் சேரியிலே இழிந்த குலத்தவரிடையே கண்ணன் வாழ்ந்தான் என்று ஆண்டாள் குறிப்பிடவில்லை. பண்டைத்தமிழர் வாழ்வியல் மரபுடன் வாழும் குலமாக அதனைக் கூறுகிறாள்.

‘எங்களைக் குற்றேவல் கொள்ளவேண்டும்’ என ஆண்டாள் கேட்பது கண்ணன் வழிபாட்டில் ஓர் அடியார் மரபைத் தொடக்கும் முயற்சியாக உள்ளது. எங்கள் பிறவியின் நோக்கம் உன் அடியவராக வாழ்வதே. எமது நோன்பின் இலக்கு ஏழேழ் பிறவிக்கும் உனக்கே ஆட்செய்ய வேண்டும் எனக்கூறி பக்திநெறியை அழகாகப் பின் தலைமுறைக்கும் கையளிப்புச் செய்து விடுகின்றாள.; கண்ணனிடம் பறையை வேண்டும் ஆயர்பாடிப் பெண்கள் உண்மையிலே கேட்பது ‘பறை’ என்னும் கருவியல்ல. ‘உனக்கு நாங்கள் ஆட்செய்யவேண்டும்’ அதனையே எல்லோருக்கும் கூறவிரும்புகிறோம். உன் புகழைப்பாடி உன்னைப் பரவுவதே எம்முடைய வாழ்நாளின் இலக்காகும.; அதற்குத் தடையாக உள்ளவற்றை நீ நீக்கியருளவேண்டும் என்பதை ‘மற்றைநங் காமங்கள்’ என வரையறை செய்து கூறுகிறாள். காமவயப்பட்டவர் பல மாறுபட்ட செயல்களைச் செய்ய முற்படுவர். உண்மையான அன்பு நெறியை உலகத்தவர் உணரவேண்டும.; அன்பு அனைவரையும் ஒருங்கிணைக்கும். காமம் சுயநலத்தையே வளர்க்கும். இளம் பெண்ணான ஆண்டாள் காமம் பற்றித் தெளிவாக இருக்கிறாள். இளந்தலை முறையினரை நெறிப்படுத்துவதற்குக் கூட்டுவழிபாடே ஏற்றது என்பதை ஆண்டாள் எடுத்துக் கூறியுள்ளாள்.
பெண்களின் நாளாந்தக் கடமைகளில் பாவை நோன்பையும் இணைக்கும் ஆண்டாள் 30 நாட்கள், ஒரு திங்கள் அந்த நோன்பைத் தொடர வழிகாட்டியுள்ளாள். காலத்தின் கணிப்பைப் பெண்கள் உணர்ந்து தம் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். ஒரு நாளின் தொடக்கத்தைச் ‘சிற்றம் சிறுகாலை’ எனக்குறிப்பிட்டுப் பெண்களைக் கடமையைச் செய்ய ஆற்றுப்படுத்துகின்றாள். அதே ‘மார்கழித்திங்கள்’ என ஒரு மாதத்தை வழிபாட்டிற்கென ஒதுக்க வேண்டுகோள் விடுத்துள்ளாள். இளமை நிலையில் எல்லோரும் இணைய நீராட்டம் செய்வது நன்று. விடிகாலையில் எல்லோரையும் துயிலெழுப்பி நீராடித் தூய்மையாக வழிபாடு செய்தபின் ஏனைய கடமைகளைச் செய்வதே நன்று என்பது ஆண்டாள் காட்டும் புதிய பக்திநெறி. அதனை அவள் பாடிய திருப்பாவை விரிவாக விளக்கியுள்ளது.


6. ஆண்டாளின் பக்தி நெறியின்


பரவலாக்கம்.

ஆண்டாள் தொடக்கி வைத்த புதிய பக்திநெறி பிற்காலத்தவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அவளை வாழ்த்திய பாடல்களால் உணரமுடிகின்றது. வாழ்த்துரைப் பாடல்கள் இன்றுவரை பக்தர்களால் ஓதப்பட்டு வருகின்றன. “கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர் சோதி மணிமாடம் தோன்றுமூர் - நீதியால் நல்லபக்தர் வாழுமூர் நான்மறைகள் ஓதும் ஊர் வில்லிபுத்தூர் வேதக்கோன் ஊர்”.இப்பாடலில் ஆண்டாள் பிறந்த ஊர் சிறப்பிக்கப்பட்டுள்ளது. “கோவிந்தன் வாழும் ஊர்” என அவ்வ+ர் வழிபாட்டுக்குச் சிறந்த ஊராகப் போற்றப்படுகிறது. கோதை தொடக்கிவைத்த பக்திநெறி எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டமையால் அவ்வ+ர் பக்தர் வாழும் ஊராக உயர்ந்தது. வில்லிபுத்தூரருடைய வழிபாட்டு நடைமுறையால் பக்தியுணர்வு பெற்ற கோதை அதனை நன்கு உள்வாங்கி உலகத்தவருக்கு ஒரு பக்திநெறியை உருவாக்கினாள். அவளுடைய திருப்பாவைப் பாடல்களைப் பாடுவதால் பல நன்மைகள் ஏற்படும் என்ற புதிய நம்பிக்கையும் பிறந்தது. “பாதங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும் வேதம் அனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு.”
என்னும் பாடல் இதற்குச் சான்றாக உள்ளது. இப்பாடல் திருப்பாவைப் பாடலின் சிறப்பை விதந்துரைக்கின்றது.

ஆண்டாளின் பக்திநெறி அவளுடைய வாழ்வில் தெய்வ அநுபவமாக நிலைபெற்றது. இதனால் பின் வந்தவர்கள் அவளையும் வாழ்த்தி வழிபடத் தொடங்கினர். பெரியாழ்வாரின் வளர்ப்புமகளாக அவரிடமிருந்து வழிபாட்டு நடைமுறைகளை அறிந்த ஆண்டாள் வழிபாட்டை வாழ்வியலாக்கும் முறைமையைத் திருப்பாவைப் பாடல்களிலே விளக்கியமை பக்தர்களைப் பரவசப்படுத்தியது. கண்ணனை வழிபடுவதற்கு ஆண்டாளை வழிபட்டு அவள் நெறி நின்றால் எளிதாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதனால் ஆண்டாளை வாழ்த்தி வழிபடும் மரபு தோன்றியது. “திருவாடிப்பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும் புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே மருவரும் திருமல்லி வளநாடி வாழியே வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.”என்று வைணவ உலகமே இன்று ஆண்டாளை வாழ்த்துகிறது.
மக்கள் வாழ்வியலில் மார்கழி மாதம் ஒரு சிறந்த மாதமாகப் போற்றப்படுகிறது. பெண்களிடையே திருப்பாவைப்பாடல்களைப் பாடி வழிபாடுசெய்யும் மரபு தொடர்கிறது.

திருப்பாவைப் பாடல்களை விட ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழி 143 பாசுரங்கள் கொண்டது. ஆண்டாளின் தமிழப்;புலமைக்கு இப்பாடல்களும் சான்றாக உள்ளன. ஆண்டாளைப் போலவே மற்றைய ஆழ்வார்களும் கண்ணனிலே ஈடுபாடு கொண்டு பல பாடல்கள் பாடியுள்ளனர். ஆனால் அதில் ஒரு வேறுபாடு உண்டு. ஆழ்வார்கள் கண்ணனைப் பாடும்போது தம்மை நாயகிகளாகப் பாவனை செய்து கொண்டு பாட வேண்டியிருந்தது. ஆண்டாளுக்கு அத்தகைய நிர்ப்பந்தம் இருக்கவில்லை. இயற்கையாகவே பெண் தன்மையில் விளங்கும் ஆண்டாளுக்குப் பெண் பாவனையைச் செய்ய வேண்டியநிலை தேவையில்லை. அதனால் ஆண்டாள் பாடல்களில் பக்திப்புலப்பாடு அருவியாகத் தங்குதடையின்றித் தமிழ்நடையில் பக்தி வெள்ளமாகப் பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஐம்புலன்களையும் அடக்கியே ஏனைய அடியார்கள் தமது பக்திப் புலப்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற்றார்கள். ஆண்டாளுக்கு அத்தகைய அகநிலைப் பேராட்டம் இருக்கவில்லை கண்ணன் மீது தெளிவான பக்திநெறியொன்றை ஆண்டாள் வெளிப்படுத்தியுள்ளான்.

ஆண்டாளின் பக்திநெறிப் பரவலாக்கத்தில் சைவ அடியாரான மணிவாசகர் முயற்சி குறிப்பிடத்தக்கது. ஆண்டாள் பாவனை செய்த பாவை நோன்பை மணிவாசகரும் பாடியுள்ளார். ஆனால் 20 பாடல்களையே பாடியுள்ளார். 30 பாடல்கள் ஆண்டாள் பாட அவர் அதனை 20 பாடலாக மாற்றியமைத்தற்குரிய காரணத்தைக் குறிப்பிடவில்லை. ஆண்டாள் மார்கழித்திங்கள் முழுமையும் பாவை நோன்பு நோற்க எண்ணியமையால் 30 பாடல்களைப் பாடினாள் எனக்கொள்ளலாம். ஆனால் மணிவாசகர் பெண்களின் தூய்மை நிலை கருதி வழிபாட்டை 20 நாட்களே தொடர்ந்து செய்யமுடியுமெனக் கருதி 20 பாடல்களைப் பாடினார் எனக்கொள்ளலாம். ஆண்டாள,; வழிபாடு உள்ளத்தில் செய்யப்படுவது என்ற உணர்வுடையவள் மேலும் அது தொடர்ந்து செய்யப்படவேண்டும் என எண்ணியவள். அதனால் ஒரு புதிய பக்திநெறியாக பாவை நோன்புப் பாடல்களைப் பாடி வழிபாட்டுமரபைக் கையளிப்புச் செய்ய முனைந்தாள். அவளுடைய நோக்கம் நன்கு நிறைவேறியுள்ளது.

மழையை வேண்டிநிற்கும் பக்திநெறியாக நாட்டுவளத்தையும் கண்ணனை வழிபட்டு வாழும் மன வளத்தையும் வேண்டிநிற்கும் ஆண்டாளின் பக்தி ஒரு புதியநெறியாக உலகம் உள்ளவரை எல்லோரையும் நன்னெறிப்படுத்தும் நெறியாக நிலைத்து நிற்கவல்லது என்பதில் ஐயமில்லை. அதற்கு நல்லதொரு சான்றாக திருப்பாவைப் பாடல்கள் இன்றுவரை வழிபாட்டு மரபில் இணைந்து நிலைத்து நிற்கின்றன. பாவைப்பாடலில் ஆண்டாளின் செந்தமிழ்த்திறனும் புலமையும் மிக்கோங்கியிருப்பதால் ‘பக்தியின் மொழி தமிழ்’ என்ற வரையறையையும் செய்வதற்கு வாய்ப்பாக அமைந்ததெனலாம். உள்ளத்திலே தோன்றும் பக்திப் பரவசத்தைக் காட்சிப்படுத்திக் காட்டுவதற்குத் தமிழ்மொழியே ஏற்றதென்பதை ஆண்டாள் மட்டுமல்ல ஏனைய ஆழ்வார்களும் நன்கு உணர்ந்திருந்ததை அவர்களுடைய பாடல்கள் மூலமும் அறிய முடிகிறது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் பக்தியை வெளிப்படுத்தத் தமிழ்மொழியைப் பயன்படுத்திய காரைக்காலம்மையார்வழியில் ஆண்டாளும் திருப்பாவையைப் பாடியுள்ளாள். அது ஆண்டாளைத் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் ஒரு புதிய இலக்கிய வடிவத்தை பயன்படுத்திய முன்னோடியாகப் பெருமை பெற வைத்துள்ளது. தொகுத்து நோக்கின் ஆண்டாள் பாடிய திருப்பாவையில் ஒரு புதிய பக்திநெறிப்புலப்பாடு தெளிவாகத் தெரிகிறது. அது பிற்காலத்தவராலும் பேணப்பட்டு இன்று வரை வழிபாட்டுமரபாகப் பரவலாக்கம் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய ஊடகமாகச் செம்மொழியான தமிழ்மொழி விளங்குகிறது என்பதே இக்கட்டுரை உலகிற்கு அறியத்தரும் செய்தியாகும்.


உசாத்துணை நூல்கள்:-

01. ஆழ்வார்கள் வரலாறு – கா.ர. கோவிந்தராச முதலியார்

02. ஆழ்வார்கள் காலநிலை – மு. இராகவையங்கார்

03. ஆழ்வார்கள் ஆரா அமுது – ந. சுப்புரெட்டியார்

04. குருபரம்பரை வரலாறு – பின்பழகிய பெருமான் சீயர்

05. திருப்பாவை உரை – பி.சி. ஆச்சார்யா அவர்கள்

06. ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை – சே. கிருஷ்ணமாச்சார்யர் பதிப்பு

07. ஆண்டாள் - கே.ஏ. மணவாளன்

08. சமயங்கள் வளர்த்த மகளிர் - மணவாளன்

09. திருவெம்பாவை உரை - ஸ்ரீமத்சுப்பிரமணியதேசிகர்.